நேதாஜிக்கு இந்தியா எப்போதும் நன்றியுடன் இருக்கும் - நேதாஜி பிறந்தநாளில் பிரதமர் மோடி புகழாரம்

புதுடெல்லி,

 

ஒடிசா மாநிலத்தில் உள்ள கட்டாக் என்ற இடத்தில் 1897 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தார்.

 

இந்திய தேசிய ராணுவத்தை தோற்றுவித்து, இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடிய இவர் ‘நேதாஜி’ என்று இந்திய மக்களால் அழைக்கப்படுகிறார்.




 

நேதாஜியின் பிறந்த தினமான இன்று அவருக்கு நாடு முழுவதும் மரியாதை செலுத்தப்பட்டது. அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினர் அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர்.




 

நாடாளுமன்றத்தில் உள்ள நேதாஜியின் உருவப்படத்திற்கு பிரதமர் மோடி, மலர் தூவி மரியாதை செலுத்தினார். இது குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது;-

 

“1897 ஜனவரி 27 அன்று ஜானகிநாத் போஸ் (நேதாஜியின் தந்தை) தனது கையேட்டில், ‘நண்பகலில் ஒரு மகன் பிறந்தான்’ என்று எழுதினார். அந்த மகன் பிற்காலத்தில் ஒரு சுதந்திர போராட்ட வீரனாக மாறினார்.

 

தனது வாழ்க்கையை இந்தியாவின் சுதந்திரத்திற்காக அவர் அற்பணித்தார். இந்தியர்களின் நலன் மற்றும் வளர்ச்சிக்காக அவர் போராடினார்.

 

நேதாஜியின் துணிச்சல் மற்றும் காலனி ஆதிக்கத்தை எதிர்ப்பதில் அவரது பங்களிப்பு ஆகியவற்றிற்காக இந்தியா அவருக்கு எப்போதும் நன்றியுடன் இருக்கும். நேதாஜியின் பிறந்தநாளான இன்று அவரை நாம் பெருமையுடன் நினைவு கூறுகிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.